கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டியபட்டினம், காட்டு முகதூம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் ரமேஷ்(24). இவர் 27.05.2020 அன்று திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்(30) என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் ரமேஷை கைது செய்தனர். மேலும் ரமேஷ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

மேற்படி எதிரி ரமேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி ரமேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன் அவர்கள் எதிரி ரமேஷை (06.06.2020) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தார்.