சொந்த கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்ய உத்தரவிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீதர்ரெட்டி. இவர் ஆந்திராவில் ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் , அந்த பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவரை தொலைப்பேசியில் மிரட்டியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்து குடும்பத்தை மிரட்டியதாகவும் தெரியவருகிறது.இது தொடர்பாக சரளா, காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் சரளாவின் புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர். ஸ்டேஷனில் துணை காவல் ஆய்வாளர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க முடியாது என்று கூறி அலைகழித்துள்ளார்கள். ஆனால் சரளா துணை காவல் ஆய்வாளர் வரும் வரை காத்திருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார். இந்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதைப் பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே டி.ஜி.பி., மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். தயவு தாட்சணை வேண்டாம் என்றார். இதனால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர்ரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் உடனடியாக கைது செய்தனர்- ஆளும் கட்சி எம்எல்ஏவை கைது செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்ட சம்பவம் அம்மாநில மக்கள் மற்றும் கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.