கரோனா நோயாளியின் குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்கு அழைக்க சென்ற சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கயத்தாறு அருகே அய்யனாரூத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர் ஆவார். இதையடுத்து அந்த கரோனா நோயாளியின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த நபரின் மனைவி, மகன், மகள், உறவினரான பெண் மற்றும் 1¼ வயது பெண் குழந்தை ஆகிய 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து சுகாதார துறையினர் அய்யனாரூத்துக்கு சென்றன. அப்போது அந்த நபரின் குடும்பத்தினர் தங்களது ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து செல்லுமாறும், அதில் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு வருவதாகவும், அதுவரையிலும் வீட்டிலேயே தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு சுகாதார துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.

அப்போது அந்த நபரின் குடும்பத்தினரை சுகாதார ஆய்வாளர் காளிராஜ் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், சுகாதார ஆய்வாளர் காளிராஜை தாக்கியதோடு கரோனா நோயாளியின் குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 108 ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த உடனே அப்பகுதி போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, சுகாதார ஆய்வாளர் காளிராஜை மீட்டு, காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கரோனா நோயாளியின் குடும்பத்தினர் 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சுகாதார ஆய்வாளர் காளிராஜை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில், அய்யனாரூத்தைச் சேர்ந்த 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.