தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடக்க உள்ளது.

திருச்செந்தூரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் 5–ந் தேதி வரை அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடப்பதற்காக திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரில் உள்ள மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது; திருச்செந்தூரில் நடக்கும் கபடி போட்டியில் ரெயில்வே அணிகள், ராணுவ அணிகள் உட்பட மொத்தம் 16 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றன. ஆண் வீரர்களுக்கு சிறந்த ரைடர், கேச்சர், ஆல்ரவுண்டர் ஆகிய 3 பேருக்கு மோட்டார் சைக்கிள்களும், வீராங்கனைகள் 3 பேருக்கு மொபட்களும் வழங்கப்பட இருக்கிறது. 

முதல் பரிசாக ஆண், பெண் இரு அணிகளுக்கும் தங்க கோப்பையுடன் தலா ரூ.11 லட்சம் ரொக்க பரிசும், 2–வது பரிசாக ரூ.5 லட்சமும் வெள்ளி கோப்பையும், 3–வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. ஆண்கள் அணிக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்க இருக்கிறார். பெண் அணிகளுக்கு கனிமொழி எம்.பி. பரிசுகள் வழங்குகிறார். இந்த போட்டிகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க இருக்கிறார் என கூறினார்.