அகில இந்திய வானொலி மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் : தூ.டி எம்பவர் சார்பில் பிரதமருக்கு மனு

ஊரடங்கு உத்திரவு காரணமாக தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருப்பது தமிழக கடலோர மாவட்ட நேயர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இந்த வானொலி நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டுமென நேயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி எம்பவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநர் சங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் : தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையமானது, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிறப்பு ஒலிபரப்பு வானொலி நிலையமாக இருந்த போதிலும் இதன் நிகழ்ச்சிகளை தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களும் கேட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே தனிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் தங்களது நேரத்தை செலவு செய்து வருகின்றனர். கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்ற நிகழ்வுகளின் போது கடலோர மக்களுக்கு தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையம் மிகவும் பயனுள்ளதாக செயல்பட்டுள்ளது.

மேலும் பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சியை இந்த வானொலி நிலையம் மூலம் ஏராளமான நேயர்கள் மாதந்தோறும் கேட்டு வருகிறார்கள். எனவே தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது