விமான சேவை ரத்து: தூத்துக்குடி to சென்னை

நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 31ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில், ஊரடங்கு எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. விமான பயணிகளுக்கு பரிசோதனைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

விமான சேவை தொடங்கிய நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான முன்பதிவும் தொடங்கியது. இதற்காக 38 பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் அதிக அளவு கொரோனா உறுதியான அச்சத்தினால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.