திரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவாகவும் வலம்வரும் நடிகர் ராஜசிம்மன்

குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், ராஜசிம்மன். சென்னை, சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோ அருகில் தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கிவருகிறார். மதிய உணவு வழங்கும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த ராஜசிம்மனிடம் பேசிய போது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம் தான் என் பூர்வீகம். பத்து வருடங்களுக்கு முன்பு பிசினஸ் பண்ணலாம்னு சென்னை வந்தேன். ஆனால், என் எண்ணம் நிறைவேறவில்லை. அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஒரு வருஷம் சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமப்பட்டேன். ஆரம்பத்துல சின்ன கேரக்டர்கள்லதான் நடிச்சேன். அப்போதெல்லாம் என் சம்பளம் முந்நூறு ரூபாய்தான். அடுத்தடுத்து எனக்கு அடையாளம் கிடைக்கிற மாதிரியான படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இப்போ சொல்லிக்கிற அளவுக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் எனக்குக் கிடைக்குது. என் குடும்பத் தேவைக்கான பணம்போக மீதமுள்ள பணத்தில், ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுறவங்களுக்கு மதிய உணவு கொடுத்து உதவலாம்னு முடிவெடுத்தேன். சிறியவங்க முதல் பெரியவங்க வரைக்கும், எத்தகைய மனிதர்களும் சாம்பார் சாதம் சாப்பிடலாம். அதனால், அதை மட்டும் தினமும் 100 பேருக்குக் கொடுக்கிறேன். இதற்காகத் தினமும் ரெண்டாயிரம் ரூபாய் செலவாகுது. ஆனாலும் நல்ல எண்ணத்துடன் தொடங்கிய காரியத்தை நிறுத்தக்கூடாதுனு இதைத் தொடர்ந்து செய்கிறேன். சினிமா உட்பட பல்துறை நண்பர்கள் சிலர் அவ்வப்போது அவங்களால இயன்ற உதவிகளைச் செய்றாங்க. மேலும் சிலர் ஒருநாளைக்கான மதிய உணவு கொடுக்கிற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செய்கிறார்கள். வாழ்நாள் முழுக்க இதைச் செய்யணும்னு ஆசைப்படறேன். வரும் ஜனவரி மாதத்திலிருந்து தினமும் மூணு வேளையும் உணவு தானம் செய்யலாம்னு திட்டமிட்டிருக்கேன்” என்று சந்தோஷமாக கூறுகிறார்