நடிகர் சார்லி சாப்ளின் பற்றி அறியாதவை…

மற்றவர்களை சிரிக்கவைத்து மனதுக்குள் அழுத மகா கலைஞன் உலகிலேயே மிக அதிகமான மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் . 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது படங்களைப் பார்த்து , குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் குதூகலிக்கிறார்கள் . சிரிப்போடு கூடவே , மனிதநேய சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம் , மற்றவர்களை சிரிக்கவைப்பதற்காக தான் கடந்துவந்த வேதனைமிக்க பாதை பற்றி சார்லி சாப்ளின் சொன்ன வலி மிருந்த வார்த்தைகள் : ” நான் மழையில் நடந்து செல்வதை விரும்புகிறேன். ஏனென்றால் மழை நீரில் நான் நடக்கும்போது , எனது கண்ணீரை மற்றவர்கள் பார்க்கமுடியாது . ” லண்டனில் 1889 ஏப்ரல் 16 – ல் பிறந்தார் சார்லி சாப்ளின் , தாயும் தந்தையும் நாடக நடிகர்கள் . தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார் . சாப்ளின் , அவரது தாய் ஹன்னா , சகோதரர் சிட்னி , மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர் . பல நாட்கள் நடைபாதைகளிலும் , பூங்காக்களிலும் தூங்கி எழுந்திருக்கும் கடினமான வாழ்க்கை . வறுமையின் பிடியில் இருந்தபோதும் , தாய் ஹன்னா சாப்ளினை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார் . ” எதிர்காலத்தில் நீ உலகிலேயே அதிக புகழ் பெற்ற மனிதனாக இருப்பாய் ” என்ற தன்னம்பிக்கை சிந்தனையை டன் கணக்கில் சார்லியின் தலையில் ஏற்றிவைத்தார் . ” சிறுவன் சார்லிக்கு 5 வயதாகியிருந்தபோது , ஒருநாள் அவனது தாய் ஹன்னா தனது மேடைப் பாடல் நிகழ்ச்சிக்கு சார்லியையும் கூட்டிச் சென்றிருந்தார் . பார்வையாளர் கூட்டத்தின் முன் பாடிக்கொண்டிருந்த ஹன்னாவுக்கு திடீர் என தொண்டைகட்டிக் கொண்டது . வார்த்தைகள் வரவில்லை . கூட்டத்தினர் கூச்சலிட்டனர் . குட்டிப் பையன் சார்லிக்கு கொஞ்சம் நடிக்கத் தெரியும் என்பதை அறிந்திருந்த நிகழ்ச்சி நிர்வாகி , சார்லியை கூட்டத்தின் முன் நிறுத்தி ” எப்படியாவது கூட்டத்தை சமாளி . . . என் மானத்தை காப்பாற்று ” என்று கெஞ்சினார் . எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த சிறுவன் சார்லி , சமயோசிதமாக தனது தாய்க்கு தொண்டைக்கட்டி அவர் பாட சிரமப்பட்ட சம்பவத்தையே நடித்துக் காட்டினான் . ஒரே பாராட்டு ஆரவாரம் ! கூட்டத்தினர் அவனை நோக்கி காசுகளை வீசி ! உற்சாகப்படுத்தினர் . ‘ கொஞ்சம் அமைதி ‘ என்று கையை காட்டியவாறே , மேடையில் விழுந்திருந்த காசுகளை பொறுமையாகப் பொறுக்கி எடுத்துக்கொண்ட சார்லி , பின் சில பாடல்களைப் பாடியும் நகைச்சுவை நடனமாடியும் கூட்டத்தை கலகலப்பாக்கினான் . வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள் சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே அவர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் . ஹான்வெல் என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார் . விடுதி காப்பாளரிடம் அடிவாங்கி , நோயில் விழுந்து அவதியுற்ற சார்லிக்கு ஆறுதல்கூறுவதற்குக்கூட யாருமே இல்லை . ” அந்த சூழலிலும்கூட , நான் உலகத்திலேயே சிறந்த நடிகர் ஆகப்போகிறேன் என்ற கற்பனை பிம்பம் தான் எனக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுத்தது ” என்று பின்னாட்களில் சார்லி தன் மகனிடம் கூறியுள்ளார். சார்லி தனது 19 ஆவது வயதில் , ப்ரெட் கார்னோ கம்பெனியில் துணை நடிகராக வேலைக்குச் சேர்ந்தார் . சார்லியின் ஒல்லியான உருவத்தைப் பார்த்த கம்பெனிக்காரர்கள் அவருக்கு பிச்சைக்காரன் , குடிகாரன் போன்ற பாத்திரங்களையே கொடுத்தனர் . எந்த பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கிற பையன் என்ற பெயர் எடுத்தார் அமெரிக்காவுக்கு நாடகக் குழு ஒன்றை அனுப்ப வேண்டியிருந்தபோது . அந்தக் குழுவில் ஒருவராக சார்லி சாப்ளின் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார் . கப்பல் அமெரிக்காவை சென்று சேர்ந்தபோது , சார்லியுடன் சென்ற ஸ்டான் லாரல் என்பவர் அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார் . ‘ கப்பலில் இருந்து இறங்கியவுடன் , அமரிக்க நிலப்பரப்பை பார்த்து கை அசைத்த சாலி சாப்ளின் நாடக பாணியில் இப்படி சொன்னார் : “அமெரிக்காவே உன்னை வெற்றிகொள்ள நான் வந்திருக்கிறேன் . இன்னும் சிலநாட்களில் இங்குள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் , ஒவ்வொரு குழந்தையும் சார்லி சாப்ளின் என்ற எனது பெயரைச் சொல்லுவார்கள் . அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது . ” அவரது மேடை நாடகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகின . 1914 ஆம் ஆண்டில் அவரை திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது கீஸ்டோன் ஸ்டுடியோ , தனித்துவம் காட்டுவதில் நிகரற்றவரான சார்லி , நாடோடி கதாபாத்திரத்தை விரைவில் உருவாக்கிக் கொண்டார் . தலையில் உயர்ந்த தொப்பி , கையில் வளைந்த தடி , இறுக்கமான சூட்டு , நறுக்கு மீசை , கோமாளி நடை கொண்ட நாடோடி கதாபாத்திரம் வெகுவிரைவில் உலகையே க வர்ந்துவிட்டது . ) ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார் . ஸ்டுடியோக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றன . 28 வயதில் உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் . ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக அவருடன் ஒப்பந்தம் போட்டது மியூச்சுவல் ஸ்டுடியோ . விரைவில் உலகிலேயே அதிக பணக்கார நடிகர் ஆகிவிட்டார் . ஆனால் அவர் பணக்காரராக வாழவில்லை . சிறு வயதிலேயே பசி , பட்டினியோடு வளர்ந்தவரான சார்லி சாப்ளின் அடித்தட்டு மக்களின் மீதான தனது அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பல படங்களை உருவாக்கினார் . ‘ ஒரு நாயின் வாழ்க்கை ‘ , ‘ தி கிட் ‘ , ‘ தி சர்க்கஸ் ‘ , ‘ தி சிட்டி லைட்ஸ் ” ‘ தி கோல்டு ரஷ் ‘ போன்ற படங்கள் சமூக அவலங்களை நகைச்சுவையுடன் சித்தரித்த குறுங்காவியங்கள் , மனிதர்களை இயந்திரங்களாக மாற்றும் அவலத்தை கேலி செய்து ‘ மாடர்ன் டைம்ஸ் ‘ என்ற படம் தயாரித்தார் சாப்ளின் . சர்வாதிகாரி இட்லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘ தி கிரேட் டிக்டேடர் ( மாபெரும் சர்வாதிகாரி ‘ ) என்ற படமும் தயாரித்தார் . இப்படங்கள் சமூக அக்கறை மிக்க மகத்தான கலைப்படைப்புகள் , இதுபோன்ற மனிதநேயம் மிக்க படங்களை உருவாக்கியதற்காக அவர் மீது அமெரிக்க உளவுத்துறை எதிர்பிரச்சாரத்தை தாண்டியது . 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த சார்லி , அமெரிக்க குடியுரிமை பெறவில்லை என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது . அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன . இதனால் அவரது ‘ யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் ‘ பட நிறுவனம் சரிந்தது . மீண்டும் தோல்விகள் அயலநாட்டானை அடித்துத் தூரத்து ‘ என்று சாப்ளினுக்கு எதிரான கோஷம் எழுப்பப்பட்டது. அவரை கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்கள்.. சாப்ளின் அஞ்சவில்லை . நான் கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன் என்று முழங்கினார். தனக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம் உச்சத்தை அடைந்த நிலையில் , சார்லி சாப்ளின் கடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார் . இங்கிலாந்து சென்றார் . பின் சுவிஸ் நாட்டில் , தங்கிவிட்டார் . யுத்தவெறியை எதிர்த்துக் குரல் கொடுக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை , தவறவில்லை . சார்லி சாப்ளினை நாட்டைவிட்டு துரத்தியது தவறு என்று 1970களில் உணர்ந்து கொண்ட அமெரிக்கர்கள் , அவரை மீண்டும் வரவைத்து விருதுகள் வழங்கிப் போற்றிப் பாராட்டினார்கள் , ‘ தி கிரேட் டிக்டேடர் ‘ படத்தின் இறுதிக் காட்சியில் , ஓர் எளிய முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தின் மூலம் சாப்ளின் பேசுகிறார் : ” ஒரு புதிய உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம் . பேராசை , வெறுப்பு , சகிப்பின்மை இவற்றுக்கு முடிவுகட்டுவோம் . அறிவார்ந்த உலகைப் படைப்போம் . அறிவியலும் , வளர்ச்சியும் மனிதகுல மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும் . ஜனநாயகம் காக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம் . “