தூ.டி யில் அதிகரித்துள்ள கிருமிநாசினி விலைகளை உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : எம்பவர் அமைப்பு செயல் இயக்குனர் சங்கர்

எம்பவர் அமைப்பு செயல் இயக்குனர் சங்கர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, முக கவசம் மற்றும் சானிடைசர் என்ற கிருமிநாசினி தட்டுப்பாடின்றி  உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் : கோவிட்19 என்கின்ற வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவலாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது வைரஸ் அச்சத்தால் முக கவசம் அணிந்து செல்ல துவங்கியுள்ளனர். பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தியுள்ளது. இதனால் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பொதுமக்கள் வாங்கத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையினை பயன்படுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூபாய் 3 முதல் 5 வரை விற்பனை செய்த முகக் கவசம்; ரூபாய் 10 முதல் ரூபாய் 30 வரை தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. வைரஸ் அச்சத்தால் பொதுமக்களும், நுகர்வோரும் இவற்றை கூடுதல் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பொது சுகாதார துறை மூலமாக பேருந்து நிலையம்,  முன் பதிவு மையம், இரயில் நிலையம், நியாயவிலைக் கடைகள், பாரதப் பிரதமரின் மக்கள் மருந்தகம், கூட்டுறவு மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம் மூலம் மலிவு விலையில் முகக் கவசம் மற்றும் தரமான கிருமிநாசினிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.