தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ பாஸ் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ பாஸ் பெறுபவர்கள் மீதும், உரிய அனுமதி பெறாமல் வருபவர்கள் மீதும் வழக்குபதிவு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட எல்கை பகுதியில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்ட வருவாய் துறை, காவல் துறை, சுகாதார துறை அலுவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சோதனை சாவடியில் இ பாசில் உள்ள கியுஆர் கோடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு முறையாக அனுமதி பெற்றுள்ளாரா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் பாண்டவர்மங்கலம் கிராமம், ராஜீவ்நகர் இ.பி. காலனி பகுதியை சேர்ந்த அமல்ராஜ் ( 49) என்பவர் ஆசிரியராக கயத்தாறு வட்டத்தில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வாகனத்தில் மருத்துவ காரணங்களுக்காக சென்னை செல்ல அருள் வசந்தி பெயரில் இ பாஸ் பெற்று, அவர் தனது வாகனத்தில் எட்டயபுரம் வட்டம் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து 3 நபர்களை கடந்த 5 ம்தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்; நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அமல்ராஜ் ,அமுதாசெல்வி என்பவரின் பெயரில் சென்னை அசோக்நகர் ஆவடி முகவரியிட்டு, மருத்துவ காரணங்களுக்காக
இ பாஸ் பெற்று இருவரை 7 ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் தெற்கு மயிலோடை கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இவர் தவறான ஆவணங்களை பயன்படுத்தி இ பாஸ் பெற்றுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்று தவறான தகவல் தெரிவித்து இ பாஸ் விண்ணப்பம் செய்து அடிக்கடி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும், ஊரடங்கு காலத்தில் நோய் தொற்றினை பரப்பும் விதமாக சென்னை சென்று வந்து தன்னை தனிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட புகார் அளித்து,.அமல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தற்போது கோவில்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் மையத்தில் காவல் பாதுகாப்புடன் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ பாஸ் பெற்று தூத்துக்குடி மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு சென்று வருபவர் மீது தொற்று நோய் பரவல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொய்யான தகவல் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இ பாஸ் பெற்றுள்ளது கண்டறியப்பட்டால் அவர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.