ஆற்றில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலி

திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணத்தை சேர்ந்த வருசை முகமது -18 என்ற இளைஞர் அங்குள்ள தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் ஆறுமுகநேரி அருகிலுள்ள கொட்டமலைக்காடு பகுதியில்
தாமிரபரணி ஆறு கடலுடன் கலக்கும் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது பாலத்தில் நின்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி திடீரென தண்ணீருக்குள் விழுந்துள்ளார். ஆறும் கடலும் கலக்குமிடம் என்பதால் நீரில் சுழற்சி அதிகமாயிருந்ததாலும் வரூசை முகமது விழுந்த வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

தகவலறிந்து வந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரம் போராடி வரூசை முகமதுவை சடலமாக மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆற்றில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.