தூ.டி ரயில்வே துறை சம்பந்தமாக செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து மனு : கனிமொழி எம்.பி,

திமுக பாராளுமன்ற குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, அவர்கள் இன்று டெல்லியில் இந்தியன் ரயில்வே துறை தலைவர் திரு வினோத் குமார் யாதவ் அவர்களை நேரில் சந்தித்து தனது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சம்பந்தமாக செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்து அதுகுறித்து மனுவும் அளித்தார்.

ரயில்வே திட்டங்கள்:

1.பாலருவி விரைவு ரயிலை (திருநெல்வேலி-பாலக்காடு-திருநெல்வேலி) தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.

2.தற்போது மும்பை-மதுரை இடையில் இயங்கக் கூடிய “லோகமான்ய திலக்” விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.(வண்டி எண்:11043/11044)

3.சென்னை-தூத்துக்குடி இடையே தற்போது ஒரே ஒரு விரைவு ரயில் (முத்துநகர் விரைவு ரயில்) மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை தூத்துக்குடி இடையே புதிதாக ஒரு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில் சென்னை-தூத்துக்குடி இடையில், கும்பகோணம்,தஞ்சாவூர் வழியாக, முந்தைய பாதையில் இயக்கப்பட வேண்டும். இதனால் தற்போது இருக்கும் பயண நெருக்கடிக்கு தீர்வதற்கு உதவியாக இருக்கும்.

4.சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலை ஆழ்வார் திருநகரியில் நிறுத்தம் செய்திட வேண்டும். இதனால் அப்பகுதியில் பயணிப்பவர்களுக்கு உதவியாக அமையும்.

5.மும்பை-நாகர்கோவில் இடையே செல்லும் வண்டி எண்:16352-16351 விரைவு ரயில், திருப்பதி செல்லும் வகையில் நீட்டித்திட வேண்டும். தற்போது ரேனிகுண்டாவில் நின்று செல்கிறது.

6. அகல ரயில்பாதை போடப்பட்ட பிறகு 21 பெட்டிகள் கொண்ட நீண்ட ரயிலாக இயக்கப்படுகிறது. காயல்பட்டிணம் ரயில் நிலையத்தில் இதற்கேற்ற நடைமேடை இல்லை. எனவே பயணிகள் பாதுகாப்பாக ஏறி, இறங்கிச் செல்லும் வகையில் காயல்பட்டிணத்தில் நடைமேடையை உயர்த்தி விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்.