விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள வாழை, வெற்றிலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் தாலுகாக்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள்  ஊரடங்கு உத்தரவால் விளைந்த வாழைத்தார்களையும், இலைகளையும் வெட்டி அனுப்ப முடியாததால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். அதே போல் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் சுமார் 200 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. விளைந்த வெற்றிலையை பறித்து  உள்ளூரிலும்,  வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால் இவர்களும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்விவசாயிகள்  அடைந்துள்ள பல கோடி ரூபாய் இழப்புக்கு நிவாரணம்  கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.