ஆலந்தலை மற்றும் பெரியதாழையில் 82.46 கோடியில் தூண்டில் வளைவு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் ரூ.52.46 கோடி மதிப்பிலும், பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் ரூ.52.46 கோடி மதிப்பிலும், பெரியதாழை மீனவர் கிராம பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதி மீனவர்கள் கடல் அரிப்பை தடுப்பதற்காக தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற நீண்ட நாளாக கோரிக்கையினை தெரிவித்து வந்தார்கள்.

இந்த கோரிக்கையினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து பெரியதாழை மீனவர் கிராம பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான அரசாணை கடந்த வருடம் வெளியிட்டார்.

மேலும், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசால் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பெரியதாழை மற்றும் ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

மேலும் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மீனவ மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமுதாய நல கூடம், மீன்பிடி இறங்குதளம், பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக மதிப்பிட்டில் மேற்கொள்ளும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உத்தரவு பெறப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெரியதாழை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சூரிய மின் சக்தி கூடிய சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பரியா, பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் பத்மா, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ் (திருச்செந்தூர்), இணை இயக்குநர் மீன்வளத்துறை சந்திரா, உதவி இயக்குநர் மீன்வளத்துறை புஸ்ராசமணம், உதவி பொறியாளர் தயாநிதி, பாதர் ஜெயக்குமார், ஆலந்தலை கூட்டுறவு சங்க தலைவர் ஜேம்ஸ், திருச்செந்தூர் செயல் அலுவலர் கோபால், வட்டாட்சியர்கள் ஞானராஜ் (திருச்செந்தூர்), ராஜலட்சுமி (சாத்தான்குளம்), ஊர் தலைவர் மாகியப்பன், டி.எம்.எஸ். சங்க தலைவர் ஸ்டார்வின், வெண்சுலாஸ், பெரியதாழை ஊராட்சி தலைவர் பிரதீபா, முன்னாள் கவுன்சிலர் லாரன்ஸ் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.