உலக மக்கள் அனைவரும் பூரண நலம்பெற வேண்டி ”ஸ்ரீசித்தர்” தாமிரபரணி நதியில் 8மணிநேர தியானம்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக அழிந்து, உலக மக்கள் அனைவரும் பூரண நலத்துடன் வாழவேண்டி  ‘ஸ்ரீசித்தர்’ தாமிரபரணி நதியில் 8மணிநேர சிறப்பு தியான வழிபாடு செய்தார்.

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதுடன், உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியாவில் கொரோனா பரவலை தடுத்திட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோதும், கொரோனா வைரஸ் நோய் தாக்குதலானது முற்றுப்பெறாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் தாக்கமானது முற்றிலுமாக நீங்கி அனைத்து மக்களும் பூரண நலத்துடன்  வாழ்ந்திடவேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி -மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியில் எட்டுமணிநேரம் சிறப்பு தியான வழிபாடு செய்தார்.

தமது முன்னோர்களான சித்தர்களின் வழிகாட்டுதல்படி  ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தாமிரபரணி நதியில் தலை மட்டும் வெளியே தெரியும்படி, நின்ற நிலையில் எட்டு மணிநேரம் ஜெபமந்திரங்கள் கூறி, அவ்வப்போது தண்ணீருக்குள் குறிப்பிட்ட நிமிடங்கள் மூழ்கி எழுந்து ஜல தியானத்துடன் கூடிய சிறப்பு வழிபாடு செய்தார்.

இதுகுறித்து, ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கூறியதாவது, கொரோனா வைரஸ் குறித்து பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் போகவேண்டி வாரம்தோறும் ஸ்ரீசித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் மற்றும் கடுமையான தியானத்துடன் கூடிய வழிபாடுகள் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தவகையில், கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக இல்லாமல் அழிந்து போகவேண்டியும், அனைத்து மக்களும் நலமாக வாழ்ந்திடவேண்டியும் சித்தர்களின் வழியில் தாமிரபரணி நதியில் அதிகாலை முதல் மாலை வரை என எட்டுமணி நேரத்திற்கு ஜெபமந்திரங்கள் ஓதியபடி தியானத்துடன் கூடிய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது என்றார்.