இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தனர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கப்பல் மூலமாக மத்திய அரசு இலங்கையில் சிக்கி தவித்து வந்த 713 இந்தியர்களை அழைத்து வந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அமலுக்கு வந்தது. லாக்டவுனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், பொதுபோக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பல லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இவர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூலம் விமானங்கள், கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமுத்திர சேது என்கிற பெயரில் கப்பல் மூலம் துபாய், மலாத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் நேற்று தாயகம் வர இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.

713 இந்தியர்களும் இன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இதில் 6 வெளி மாநிலத்தவர் உட்பட 514 ஆண்கள், 199 பெண்கள் என மொத்தம் 713 பயணிகள் வந்தனர். முன்னதாக துறைமுகத்திற்கு வந்த பயணிகளை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 30 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்ப வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு காலை உணவு பேருந்துகளில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்:-

“இலங்கையில் இருந்து வந்த அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்படுவர், வரும் ஏழாம் தேதி இதே கப்பல் மாலத்தீவில் சிக்கிக் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரவுள்ளது. ஏற்கெனவே இந்த கப்பல் மாலத்தீவில் இருந்து 698 இந்தியா்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 17 ஆம் தேதி ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் கப்பல் மூலம் மீட்க்கப்பட்டு அழைத்து வரப்படவுள்ளனர்” என தெரிவித்தார்

நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ், துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.