வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் – தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், வங்காளவிரிகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்பசு, கடல்குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும், வைத்திருக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி  பலவித மருந்துகள் தயாரிப்பதற்காக கடல் அட்டைகளைப் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும், பதப்படுத்தியும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. 

இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்டோர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டிலுள்ள மகளிர் கல்லூரி அருகே ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்,  தூத்துக்குடி  கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சைரஸ், சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், நுண்ணறிவு பிரிவு காவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். 

அப்போது அங்கு 8 மூடைகளில் இருந்த 200 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தூத்துக்குடி பள்ளிவாசல் தெரு வழியே வந்த காரை மடக்கி கடலோர காவல் படையினர் சோதனையிட முயற்சித்தனர். அப்போது காரை ஓட்டிவந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தொடர்ந்து, காரை சோதனையிட்டபோது காரின் பின்புறத்தில் 4 மூடைகளில் கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடல் அட்டைகள் காருடன் பறிமுதல் செய்ப்பட்டது. இன்று தூத்துக்குடியில் மொத்தம் 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.35லட்சம் ஆகும். இது தொடர்பாக லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த மீராஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.