ஊரடங்கு முடிந்தவுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கும் – மாவட்ட ஆட்சியர்

எம்பவர் அமைப்பு சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை 13000 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் கரோனா தொற்றால் மாவட்டத்தில் 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்,மஹாராஷ்டிரா, மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த நபர்களால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வெளியூரிலிருந்து வருபவர்களை 15 சோதனை சாவடிகளில் சோதனை செய்து கரோனா அறிகுறி இருந்தால் தனிமைப் படுத்தும் முகாம்களுக்கு அனுப்பபடுவார்கள்.ஜுன் 2 ம் தேதி இலங்கையிலிருந்து ஒரு பயணிகள் கப்பல் தூத்துக்குடி வந்தது. ஜுன் 7 ம் தேதி மாலத்தீலிருந்து கப்பல் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 700 பயணிகள் பயணம் செய்ய உள்ளனர். இதில் 513 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

நமது மாவட்டத்தில் தென்திருப்பேரை, மற்றும் காயல்பட்டணத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகமானதால் அந்த பகுதிகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை .

ஊரடங்கு முடிந்தவுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கும். அது போல் தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டிய பல்லுயிர் பூங்கா திட்ட பணிகளும் விரைவில் துவங்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.