தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக் கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வ.உ.சிதம்பரம் கல்லூரி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் தென்மண்டல அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கை, கால் ஊனமுற்றோர், காது கேளாதோர், வாய்பேச இயலாதவர், குறைந்த பார்வையுடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் வி.ஆர். யுவர். வாய்ஸ் (We Are Your Voice) இணையதள முன் பதிவு சேவையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். சமூக நலத்துறை மூலம் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் சுய தொழில் துவங்க அரசு மானியமாக தலா ரூ.50,000/-க்கான காசோலையினையும்,
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவருக்கும், வட்ட சட்ட பணிகள் குழு பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளி செல்வி ஆகிய 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,10,000/- மதிப்பில் வீடு கட்டுவதற்கான உத்தரவு கடிதத்தினையும், கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் சந்தனமாரி என்பவர் ரூ.7,500/- கல்வி கட்டணம் கோரி உதவி செய்யுமாறு விண்ணப்பம் அளித்திருந்தார். இன்று சந்தனமாரியின் தாயார் கோமதி என்பவரிடம் ரூ.7,500/-க்கான காசோலையினை என மொத்தம் 8 நபர்களுக்கு ரூ.6.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சுகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள், வ.உ.சி. கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு, வி.ஆர். யுவர். வாய்ஸ் தலைவர் காசிம் பாசித், மாவட்ட நிர்வாகிகள் வி.பிரான்சிஸ் சேவியர், முஜாகித், நசீர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.