ஆலந்தலையில் ரூ.52.46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு : ஆட்சியர் தகவல்

ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் ரூ.52.46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க அரசாணை வெளியீடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு, கடலோர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் படகுகள் சேதம் அடைவதாகவும், மீன் தொழிலில் ஈடுபடும்போது அதிகமாக பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனுக்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதந்த போது தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக சாத்தியகூறினை ஆராய்ந்து, அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் சென்னை ஐஐடி குழுவினர் மூலம் நேரில் ஆய்வு செய்து, சாத்தியகூறுகள் தொடர்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் 22.02.2020 அன்று நடைபெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர், திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்தில் நீளமான தூண்டில் வளைவு 2 எண்ணிக்கைகளும், குட்டை அளவான தூண்டில் வளைவு 5 எண்ணிக்கைகள் என மொத்தம் 7 எண்ணிக்கைகளான தூண்டில் வளைவு ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை கிராமத்தில் ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்க பொதுப்பணித்துறை மூலம் 02.06.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது” என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.