50 சதவிகித உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு : தூத்துக்குடி

தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில் நேரடியாக 25,000 தொழிலாளர்களும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வேகமாகப் பரவி வரும் கொரனா வைரஸ் குறித்த அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் உப்பு அனுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், உப்பு பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்ததுடன் ரூ.1 கோடி மதிப்பிலான உப்பு வர்த்தகம் சரிந்துள்ளது.  இதனால் 50 சதவிகித உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.