தூத்துக்குடியில் 5 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து தனிமைப்படுத்தி வருகின்றனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியில் செல்லவோ, வெளிநபர்கள் அந்த பகுதிக்கு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே 10 நோய் கட்டுப்பாட்டு மண்டலம் இருந்தது. இந்த பகுதியில் 28 நாட்கள் தொடர்ச்சியாக புதிய தொற்று ஏற்படவில்லை என்பதால், அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் மட்டுமே அந்த பகுதிகளில் உள்ளது. இந்நிலையில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அமைந்து உள்ள மளவராயநத்தம், சேரகுளம், ஆதனூர், கோவில்பட்டி ராஜீவ்நகர், இனாம்மணியாச்சி ஆகிய 5 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த பகுதி மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.