மும்பையில் இருந்து சடலத்துடன் வந்த 5 பேர் கோவில்பட்டியில் தடுத்து நிறுத்தம்!

மும்பை தாராவியில் இருந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக 59 வயதுடைய ஆண் சடலம் ஒரு ஆம்புலன்ஸிலும், அவரது மகன் உள்பட 5 பேர் ஒரு காரில் மும்பை தாராவியில் இருந்து அனுமதியுடன் நாசரேத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.

கார் மற்றும் ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்கையான தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில், சடலத்தை நாசரேத்துக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கை நடத்த செல்வதாகக் கூறினர்.

இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் பொன்னம்மாள், காவல் துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, சுகாதாரத் துறையினர் ஆகியோர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை பெற்றனர். அதையடுத்து கோவில்பட்டி மயானத்தில் சடலம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

பின்னர் அதையடுத்து காரில் வந்த 3 ஆண் மற்றும் 2 பெண்கள் 5 பேருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்து பரிசோதிக்கப்பட்டு பின்னர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை எடுத்து அனுப்பப்பட்டது.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் மும்பைக்கு திரும்ப அனுப்பப்பட்டார்கள்.

இதுபோல, கேரளாவில் இருந்து கயத்தாறு வட்டம் சவலாப்பேரி மற்றும் சிவஞானபுரத்திற்கு பைக்கில் வந்த 60 வயதுடைய ஆண் மற்றும் 51 வயது ஆண் ஆகிய இருவரும் கயத்தாறு சிவஞானபுரம் விலக்கில் தடுத்து நிறுத்தப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.