விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி – முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இசக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (20) ஆகிய 4 பேர் இறங்கிய போது விஷவாயு தாக்கி இறந்தனர்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் உள்ளே இறங்கி பார்த்தபோது போது விஷவாயு தாக்கி 4பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 4பேரின் உடல்களும் வெளியே மீட்கப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.