தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 30 திருநங்கைகளுக்கு தலா ரூ.1.80 லட்சம் மதிப்பில் வீடுகள் மற்றும் தலா ரூ.30,000 மதிப்பில் சூரிய மின்சக்தி அமைக்கும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் 30 திருநங்கைளுக்கு தலா ரூ.1.15 லட்சம் மதிப்பில் மாட்டு தொழுவத்துடன் கூடிய பால் பண்ணை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.97.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (25.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் , வீடுகள் கட்டும் பணிகளை கூடுதல் ஆட்களை கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இப்பகுதி தெருக்கள் மற்றும் அணுகு சாலை வசதிகளையும், தெருவிளக்கு வசதிகள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்விராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்; மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.