கரோனாவிலிருந்து மேலும் 3 பேர் குணமடைந்தனர் – தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து இன்று காலை வீடு திரும்பினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயினால் 27 நபர்கள் பாதிக்கப்பட்டு அதில் 22 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 5 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 17 நபர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 நபர்களும் குணம் அடைந்து ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து போல்டன் புரத்தை சேர்ந்த 2 நபர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து அய்யனாரூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபரும் இன்று (25.04.2020) வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குணமடைந்தவர்களை மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி மற்றும் மருத்துவர்கள், பழங்கள் வழங்கி வாழ்த்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குணம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனை முதல்வர் ரவிசந்திரன் பழங்கள் வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என இன்னும் 4 நபர்கள் மட்டும் கொரேனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கரோனா வைரசின் சங்கிலி தொடர் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.