3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் – உதகை ரயில் பாதை

உதகைக்கு செல்லும் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் மேட்டுப்பாளையம் – உதகை ரயில் போக்குவரத்து இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மிகவும் புகழ்பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து மேட்டுப்பாளையம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.

ரயில் செல்லும் பாதை சேதமடைந்ததால், மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.