2ஆம் தவணை ரூ. 2,000 டோக்கன் விநியோகம் துவக்கம்! – தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. 
இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இதற்கான டோக்கன் விநியோகிக்கப்படும். ஜூன் 15 முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரை டோக்கன் அடிப்படையில் மளிகைப் பொருள்கள் மற்றும் இரண்டாம் தவணை ரூ. 2,000 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.