தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்

கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடந்தது. மார்ச் மாத இறுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 27-ம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி சி.கே.டி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற தொடங்கியது.

கொரோனாவையொட்டி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூடுதலாக 5 உப மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வகுப்பறையிலும் முதன்மை தேர்வர் தலைமையில், கூர்ந்தாய்வாளர், 6 உதவி தேர்வர் ஆக மொத்தம் 8 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று (19.05.20) விடைத்தாள் கட்டுகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகின்றன. அதனை அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விடைத்தாள் திருத்தும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்தார்.