16 பேர் மருத்துவ ஊழியர்கள் தனிமை வார்டில் அனுமதி – கரோனா கொடூரம்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர், அவரது கணவர், மாமியார் ஆகிய 3 பேருக்கும் நேற்று முன்தினம் கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று கூறியதாவது: தூத்துக்குடியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மற்ற 2 பேரும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எனவே தற்போது அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் எந்த சிகிச்சையும் நடைபெறவில்லை. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியருடன் நெருங்கி பழகியதாக மருத்துவமனை ஊழியர்கள் 16 பேரும், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் மாடியில் வசித்து வந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டில் அனுமதிக் கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.