ஊரடங்கிற்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்பட இருக்கின்றன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அந்த தேர்வு கண்டிப்பாக நடக்கும். மே 3-ந்தேதி வரை ஊரடங்கு இருக்கிறது. ஊரடங்கு முடிந்ததும், தேர்வை எப்படி நடத்தலாம்? என்பதை முதலமைச்சரின் கவனத்துக்கு கல்வித்துறை மூலம் எடுத்து செல்ல உள்ளோம். ஊரடங்குக்கு பிறகுதான் தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நிலவி இருக்கிறது. அதற்கேற்ப முடிவுகள் மேற்கொள்ள உள்ளோம்.

ஊரடங்கு முடிந்ததும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆசிரியர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்படும். அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் 24-ந்தேதி நடந்த பிளஸ்-2 தேர்வை 34 ஆயிரத்து 742 பேர் எழுத முடியாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில், அவர்களுக்கான வாய்ப்பு துறை சார்பில் வழங்கப்படும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணத்தை கட்டாயம் வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீறி யாராவது கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.