ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் ஃபைன் – சென்னை

மழைக்காலம் துவங்கி விட்டதால், சென்னை நகர் முழுக்கவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுத்து மக்களைக் காக்கும் விதமாக அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை சார்பில், நகரின் பல பகுதிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை நடத்தி வருகிறது. நேற்று காலை சென்னை மூலக்கடை மேம்பாலத்துக்குக் கீழே அப்படியொரு முகாம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சிக்னலில் போக்குவரத்தைச் சரி செய்துக் கொண்டிருந்த மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பொதுமக்கள் எல்லோருமே நிலவேம்பு கஷாயத்தைக் கண்டுக் கொள்ளாமல் செல்வதைக் கவனித்தார். உடனடியாக நூதனமான வழி ஒன்றை முயற்சித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், செல்வராஜ் ஆகியோரோடு ஆலோசித்து, அந்த பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மடக்கிப் பிடித்து, ஆளுக்கு ஒரு கிளாஸ் நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கச் சொல்லி ஃபைன் போட்டார். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களும் அக்கறையாய் அருகே சென்று ஒரு கிளாஸ் கஷாயத்தை குடியுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.