மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்ட பா.ம.க. பிரமுகர் – விழுப்புரம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, கூட்டத்துக்கு வந்திருந்த பா.ம.க. பிரமுகர் மீது மின்சாரம் பாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை காணை மெயின்ரோட்டில் பிரசாரம் செய்தார். கூட்டத்தை காண்பதற்காக மாம்பழப்பட்டு, ஓட்டன் காடுவெட்டி, கெடார், தருமபுரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் வேன்கள் மூலம் அழைத்து வந்திருந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரச்சார இடத்துக்கு வந்தார். வாகனம் செல்வதற்கு தடையாக சாலையில் கூடியிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, வழி ஏற்படுத்தினார். இதன் காரணமாக அங்கு பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அப்போது பிரசாரத்துக்கு வந்திருந்த பாமக பிரமுகர் சண்முகம் (42) என்பவர், சாலையோரமாக ஒதுங்கி சென்றார். நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்டார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு விழுப்புரம் அரசு பொதுமருத்துவமனைக்கு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வரின் பிரசரத்துக்காக மின்கம்பத்தில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் எடுத்ததால், மின்கசிவு ஏற்பட்டுள்ளது, மேலும் மழை தண்ணீர் தேங்கியிருந்ததே விபத்துக்கு காரணமெனெ தெரியவந்துள்ளது. இதுகுறித்து காணை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.