மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பற்றிய தகவல் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1.83 கோடி முன்னதாகவே அனுப்பப்படுகிறது.


இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் தற்போது கொரோனோ வைரஸ் தொற்று நோய் தடுப்பதற்காக 24.03.2020 முதல் 14.04.2020 வரையில் 144 தடையுத்தரவு அரசால் விதிக்கப்பட்டிருந்த காலத்தில் அரசின் அத்தியாவசிய பணிக்காக பல்வேறு துறைகள் பணியாற்றிட ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவுநோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர் பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1500/- வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிகவனம் செலுத்தும் விதமாக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஆணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை முன்னதாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏப்ரல் மற்றும் மே 2020, இரண்டு மாதத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 750 நபர்களுக்கு தலா ரூ.3000 வீதம் ரூ.22,50,000மும், மனவளர்ச்சி குன்றியோர் 5200 நபர்களுக்கு தலா ரூ.3000 வீதம் ரூ.1,56,00,000மும், தசை சிதைவுநோயால் பாதிக்கப்பட்டோர் 40 நபர்களுக்கு தலா ரூ.3000 வீதம் ரூ.1,20,000மும், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர் 103 நபர்களுக்கு தலா ரூ.3000 வீதம் ரூ.3,09,000மும் ஆக மொத்தம் ரூபாய் 1,82,79,000/- அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் இத்தொகையினை எடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.