பிரசாத் ஸ்டூடியோ இயக்குநர் இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜா தரப்பில் புகார்.

தன்னை இசையமைக்க விடாமல் தொல்லை தருவதாக, பிரசாத் ஸ்டூடியோ இயக்குநர் உட்பட 3 பேர் மீது, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளையராஜா ஒலிப்பதிவு செய்யும் இடத்தில் பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குநரும், எல்.வி.பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத், 20 கணினிகளை வைத்துக்கொண்டு வேறு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இசையமைப்பதில் இடையூறு ஏற்படுவதாகவும், தங்கள் இசைக்கருவிகள் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் இளையராஜா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி ஸ்டூடியோவை ஆக்ரமித்ததாக பிரசாத் ஸ்டூடியோ இயக்குநர் சாய் பிரசாத், ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் மீது, இளையராஜாவின் உதவியாளர் கஃபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.