தோனியால் வர்ணனையாளராக செயல்பட இயலாது – பிசிசிஐ

இந்தியா-வங்கதேசம் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக டெஸ்ட் போட்டி குறித்த விழிப்புணர்வு ரசிகர்களிடையே அதிகரிப்பதோடு தற்போது வந்து கொண்டிருப்பதை விட பார்வையாளர்கள் எண்ணிக்கை டெஸ்ட் போட்டிக்கு பல மடங்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை கூட்டும் பற்றத்தில் தோனியை வர்ணனையாளராக வரவழைக்க முடிவு செய்து பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த பிசிசிஐ தரப்பு தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னமும் பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கிறார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒருவர் வர்ணனையாளராக செயல்பட இயலாது. அவ்வாறு செயல்பட்டால் அது இரட்டை பதவியாக கருத்தில் கொள்ளப்பட்டு ஏதேனும் ஒன்றிலிருந்து விலக்கப்பட நேரிடும். எனவே தோனி அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகே வர்ணனையாளராக தொடரலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியை காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு, இது பெரும் அதிர்ச்சியாகவும், சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.