தொடரும் வடகிழக்கு பருவமழை- வேகமாக நிரம்பும் அணைகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது, இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், முல்லை பெரியார் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 852 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. எனவே நேற்று காலை 60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து தற்போது 62 அடியாக உள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.