திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு: மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, கரோனா வார்டு மற்றும் அனைத்து வார்டுகளையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது  :- கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1200 பேர் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களை அந்தந்த பகுதி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அந்த 14 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்றே முடிவு வந்துள்ளது. எனவே அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்