‘சுவாமி இருப்பதால் தானே இந்த ஆட்டம் போடுகிறீர்கள்…’ – மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது கோவில்பட்டி கிராமம். இங்குள்ள மருதோதய ஈஸ்வரர் சிவனேசவல்லி கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சில ஆண்டுகளாக கோவில் பராமரிக்கப்படாத நிலையில் கோவிலுக்குள் விளையாடுவது, உறங்குவது என அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் கோவிலின் புதிய நிர்வாகிகள் கோவிலின் வழக்கமான பூஜை பணிகளை செய்து வழிபாடுகளை முறைப்படுத்தியுள்ளனர். இதனால் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் பலரும் கோவிலுக்கு வரத்துவங்கியுள்ளனர். இதனால் கோவிலை ஓய்வெடுக்க பயன்படுத்திய இளைஞர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரதோஷம், நவராத்திரி விழா என அடுத்தடுத்து விழாக்களை கோவில் நிர்வாகம் விமர்சையாக நடத்தியதுடன் அதில் பங்கேற்க வருமாறு சுற்றுவட்டார மக்களுக்கும் அறிவித்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வினித்(21) என்ற இளைஞர், கோவில் நிர்வாகத்துடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ‘சுவாமி இருப்பதால் தானே இந்த ஆட்டம் போடுகிறீர்கள்…’ என எச்சரித்த வினித், அதற்கான சமயம் பார்த்து வந்துள்ளார். கடந்த வெள்ளியன்று பிரதோஷ பூஜை நிறைவு பெற்ற பின் இரவு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவில் கோவில் பின்புற சுவர் ஏறி குதித்த வினித், சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த கருவறையை உடைத்து திறந்தார். பின்னர் உள்ளே நுழைந்து 41 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன சிவன், பார்வதி சிலைகளை அங்கிருந்து திருடிச் சென்றார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு வந்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய நிலையில், உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணையை தீவிரப்படுத்தியது. மிரட்டல் குறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் போலீசாரின் விசாரணை வினித் பக்கம் திரும்பியது போலீசார். விசாரித்ததில் திருடியதை வினித் ஒப்புக் கொண்ட நிலையில் கிராமத்தில் ஒரு புதரில் ஒழித்து வைத்திருந்த சிலைகளை போலீசார் மீட்டனர். நண்பர்களுடன் உரையாட கோவில் உதவியாக இருந்ததாகவும், அங்கு பக்தர்கள் அதிகம் வந்ததால் தமக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் எனவே சிலைகளை கடத்தியதாக வினித் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிலை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.