எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்த க்ரீன் சிக்னல் நிறுவனம்……

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எழுந்துள்ள பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்து க்ரீன் சிக்னல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி திரைப்படத்திற்க்கான தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் பணத்தை அவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பிரம்மானந்தம் சுப்ரமணியன் சார்பில் மணிமாறன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் எஸ்.ஏ.சந்திரசேகர் யாரையும் ஏமாற்றியதாக இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை என்றும், அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இந்த மோசடி புகார் கூறப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகரின் க்ரீன் சிக்னல் தயாரிப்பு நிறுவனம், தெரிவித்துள்ளது. 
இதுவரை நடந்த உண்மைகளை ஆதாரத்துடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாராக அளிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.