எதிர்த்து பேசிய சக மாணவனை சாதி பெயரை சொல்லி வெட்டிய 9-ம் வகுப்பு மாணவன் – மதுரை

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’, ‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களிலேயே ஜாதி சண்டைகள் நிகழ்வது வேதனை அளிக்கும் விஷயம். என்றாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தேறிதான் வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் மாணவன் சரவணக்குமார். இவருடன் பயிலும் மகேஸ்வரன் எனும் மாணவன் இவரது புத்தக பையை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், மகேஸ்வரனிடம் பையை கேட்டு வாக்குவாதம் செய்ய, மகேஸ்வரனோ சாதி பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியதுடன், ‘நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசும் அளவிற்கு வந்து விட்டாயா?’ எனக்கூறி, கையில் இருந்த பிளேடால் சரவணக்குமார் முதுகில் ஆழமாக வெட்டிவிட்டு தப்பியோடி இருக்கிறார். இதனை அடுத்து அவர் வலியால் அலறி துடிக்க, ஆசிரியர்கள் மாணவனை மருத்துவனையில் அனுமதித்தனர். காயம் ஆழமாக இருந்த நிலையில் மாணவனின் முதுகில் பல தையல்கள் போடப்பட்ட நிலையில், வெட்டிய மகேஸ்வரன் மீது போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.