இஸ்ரோவை பார்வையிட 100 அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம்,கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 3 நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை கோபியில் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவிற்க்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 300 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் பின்னர் பேசிய அவர் : இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ளபள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவியலில் சிறந்து விளங்கும் 100 அரசுப் பள்ளிமாணவர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் என 200 பேர் இஸ்ரோவின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள அழைத்து செல்லப்படுவார்கள். கண்காட்சியில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் முதல் 2 இடத்தைபிடித்த மாணவிகளான கே.வினோதா, எம்.மகிமாசுவேதா ஆகியோர் இஸ்ரோவில் இருந்து ராக்கெட் ஏவும்போது, அதை நேரடியாக விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.விழாவின் நிறைவாக, கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தியாகராசு நன்றி கூறினார்.