இந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்? – பசுமை தாயகம்!

ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள்ரத்தினம் அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று (20.11.2020) காலநிலை அவசரநிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம், கரியமியல் வாயு வெளியாகும் நிகர அளவை 2050 ஆம் ஆண்டிற்குள் பூஜ்யம் ஆக்குவது (net zero by 2050) என அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது ஜப்பான் நாடு.

உலகில் மிக அதிக மாசுக்காற்றை தற்போது வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் நாடு, காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்திருப்பது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். (ஜப்பானை விட அதிக மாசுக்காற்றை வெளிவிடும் நாடுகள் சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஆகியனவாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றாக கணக்கிட்டால், அவை இப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் வரும்) இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே காலநிலை அவசரநிலை பிரகடத்தை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றியுள்ளன. ஆசிய நாடுகளில் தென் கொரியா, வங்கதேசம், மாலத்தீவுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. உலகெங்கும் லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களும், 1700 நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்த பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளன.

பின்னணி என்ன?

உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். புவிவெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது! இது பூமியின் ஆறாவது உயிரினப்பேரழிவு (Sixth Mass Extinction) என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் பூமியில் விழுந்து ஐந்தாவது உயிரினப்பேரழிவு நிகழ்ந்தது).


பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் (Global Warming) காரணமாகும். புவிவெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளது. வரும் ஆண்டுகளில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.


புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க, உலகின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உலகின் போக்கை தலைக்கீழாக நாம் மாற்றாவிட்டால், நமக்கும் நமது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான உலகம் இருக்காது!


2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் காலநிலை மாற்றம் தொடர்பான சூழலை தலைக்கீழாக மாற்ற வேண்டும் என ஐநா அறிவியலாளர்கள் IPCC குழு அறிவித்துள்ளது. அதற்கான மிகவேகமான நடவடிக்கைகளை 2020 ஆம் ஆண்டில் தொடங்கினால் மட்டுமே உலகின் அழிவை தடுக்க முடியும் என எச்சரித்துள்ளது. அதாவது, இப்போதே தொடங்கி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மாற்றினால் மட்டுமே – உலகம் அழிவதை தடுக்க முடியும்! இது அறிவியல் பூர்வமான உண்மை ஆகும்.


எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய அவசர காலம் இதுவாகும். எனவே, இந்தியாவில் மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு கோருகிறது. இதற்கான பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்கள்.


‘காலநிலை அவசரநிலை பிரகடனம்’ வெளியிடுதல் என்பது புவிவெப்பமடைதல் ஒரு பேராபத்து என்பதை அங்கீகரித்து, அதனை தடுக்கவும் சமாளிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொள்வது ஆகும். இதன் மூலம், சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் வழக்கமான செயல்பாடுகளை கைவிட்டு, இயற்கையை காப்பாற்றவும், பேரிடர்களை எதிர்க்கொள்ளவும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்று திரட்டி போர்க்கால நடவடிக்கையில் இறங்க அனைவரும் முன்வர வேண்டும்.

  1. அனைத்து அரசுகளும், அமைப்புகளும், நிறுவனங்களும் காலநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும்
  2. புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல்திட்டத்தை (Climate Emergency Action Plan) ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.
  3. அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி, காலநிலை செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
    இன்றே செயல்பட தொடங்காவிட்டால், நமக்கும், நமது குழந்தைகளுக்கும் எதிர்காலமே இல்லை. இந்த அவசரநிலையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்போம். பூவுலகம் அழியாமல் காப்பாற்றுவோம்.

இவ்வாறு அருள்ரத்தினம் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *