தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 200 இடங்களில் வாகன சோதனை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குரூஸ் பர்னாந்து சிலை அருகே ஊரடங்கு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஊரடங்கு உத்தரவை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்கும் பொருட்டு மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மற்ற புகார்கள் மீது காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு கடற்கரை மற்றும் பொது வழிபாட்டு இடங்களில் தர்ப்பணம் செய்யும் இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *