மூணாறு நிலச்சரிவு சம்பவம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆறுதல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு நிலச்சரிவில் இறந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த சுமார் 55 நபர்கள் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலைத் தோட்டத்தில் மூன்று தலைமுறையாக வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை காரணமாக நேற்று (08.08.2020) மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 55 நபர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 18 நபர்கள் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் (09.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், கயத்தாறு பாரதி நகரில் உள்ள இறந்த முருகன் (வயது 45) என்பவரின் மகள்கள் சரண்யா (வயது 19), அன்னலட்சுமி (வயது 17) ஆகியோரையும், இறந்த மற்றொருவரான சண்முகையா (வயது 60) என்பவரது மகன் விஜய் (வயது 20) மற்றும் இறந்த மற்றொருவரான பன்னீர்செல்வம் (வயது 51) என்பவரது தந்தை ஆறுமுகம் (வயது 85) ஆகியோரையும், அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் கோயம்புத்தூரில் உள்ள இறந்த முருகனின் உறவினர்கள், கயத்தாறு பாரதி நகரில் உள்ள முருகன் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிக்க இ.பாஸ் விண்ணப்பித்து கிடைக்காத நிலையில் கயத்தாறு பாரதிநகர் மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் இ. பாஸ் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இ. பாஸ் பெற்றுக்கொடுத்தார். அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கயத்தாறு காவல் ஆய்வாளர் திரு. முத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *