“கொரோனா தடுப்பு பணிகளில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது” – சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கொரோனா தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள், என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் 2 கொரோனா தொற்று பரிசோதனை கருவிகளை துவக்கி வைத்தார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (18.07.2020) நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகள் வழங்கிட வேண்டும். இதற்கு தேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்திட வேண்டும்.

அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிசிச்சைகளை அளித்திட வேண்டும். தூத்துக்குடி மருத்துவமனையில் ஆக்சிசன்
லைன் படுக்கைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அமைத்திட நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கொரோனா தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1,405 நோயாளிகள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,601 கர்ப்பிணி தாய்மார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி தனியாக வார்டுகள் அமைத்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 52 தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும், சேயும் குணப்படுத்தியுள்ளார்கள். மேலும் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு பூரணம் குணம் பெற தேவையான நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.

உலக அளவில் வல்லரசு நாடுகள் கூட கூடுதல் படுக்கை வசதிக்கே திணறிக்கொண்டு இருக்கிற இந்த கால கட்டத்தில், மாண்புமிகு அம்மாவின் அரசு தேவையான படுக்கை வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தி தந்து வருகிறது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் தற்போது 600 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது.

மேலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் 1,094 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 240 படுக்கைகளுக்கு ஆக்சிசன் பைப்லைன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும்
கூடுதலாக ஆக்சிசன் பைப்லைன் அமைத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்திட ரூ.76 கோடி மதிப்பில் ஆக்சிசன் கருவிகள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அலோபதி மருந்துகள் மட்டுமின்றி சித்தா, யோகா முறைகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 1,100 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையிலும், கொரோனா தொற்று முடிவு விரைவில் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் 2 ஆர்டிபிசி ஆர் கருவிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினசரி 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளமுடியும். மேலும் மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ள லேப் டெக்னிசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசோதனைகள் இன்னும் அதிகரித்து நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை இதுவரை 26 பேருக்கு அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமாகி சென்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

எனவே குணமானவர்கள் அதிக அளவில் மனமுவந்து பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 109 மையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தபடி பொதுமக்கள் அவசிய வேலைக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளிவர வேண்டும் என தெரிவித்தார்கள். வீட்டில் இருந்து வெளிவரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், தமிழக அரசு மேற்கொள்ளும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர், டூவிபுரம் இரண்டாவது தெரு நோய் கட்டுபாட்டு பகுதியில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும், நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் மூலம் மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்கள்.

மேலும், வீடு வீடாக சென்று பல்சஸ் பரிசோதனை செய்யும் பணிகளையும், தமிழக அரசு மூலம் வடிவமைக்கப்பட்ட
கொரோனா தொற்று விழிப்புணர்வு மடிப்பேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி, முககவசங்களை அணிந்து அவசிய வேலைக்கு மட்டுமே வெளிவர வேண்டும் என தெரிவித்தார்கள்.

டூவிபுரம் பகுதி பொதுமக்கள் தமிழக அரசு எங்களுக்கு சிறப்பான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு எங்களுக்கு சிறப்பான சிசிச்சைகளை அளித்து வருவதற்கு தமிழக அரசுக்கு
தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதிபாலன், இணை இயக்குநர் மருத்துவ நல பணிகள் (பொ) மரு.பொன் இசக்கி, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார், உதவி ஆணையர் சரவணன், உறைவிட மருத்துவர் மரு.சைலேஸ் ஜெபமணி, மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *