கோவில்பட்டி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் பொதுமக்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்படுவதை பார்வையிட்டார். மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 250 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், அங்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் இதுவரை 71,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 7,100 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,000 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். 2,214 பேர்; சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நமது மாவட்டத்தில் அதிக அளவு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் அதிக அளவு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதுடன் அவர்களுக்கு அருகில் உள்ள தெருக்களில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தினசரி சுமார் 65 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது.
முதலமைச்சர் காணொலி காட்சி மூலம், நமது மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பரிசோதனைகளை 2,000ல் இருந்து 3,000ஆக அதிகரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் சுமார் 2,100 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களுடன் இணைந்து இதனை 3,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் 700 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 400 படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் தயார் நிலையில் உள்ளது.
மேலும் 3 கல்லூரிகளில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயினை கட்டுப்படுத்துவதற்காக 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படும். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் மற்றும் கோவில்பட்டி போன்ற நகர பகுதிகளில் அதிக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தன்னார்வலர்களை பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கபசுர குடிநீர், விட்டமின் மற்றும் சிங் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், அலுவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
நமது மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் அதிக அளவில் நடத்தப்படுவதால் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் இது ஒரு வார காலத்திற்குள் மேலும் குறையும். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முககவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Source: டைம்ஸ் ஆப் கோவில்பட்டி