தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’ பரிசோதனை இன்று தொடக்கம்: சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் நடக்கிறது…!!!

ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தது.

கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி மற்றும் பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை தொடங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்குகிறது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்குகிறது

Source: dinakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *