தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக விண்ணப்பிப்பதற்கு 15.09.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் எஸ்.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக விண்ணப்பிப்பதற்கு 15.09.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2020. 
8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ள விளக்கக் கையேட்டில் (Prospectus) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு நிலை முன்னுரிமைச் சான்றிதழ்கள் (Special category Priority Certificate) இருப்பின் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும்; மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திலுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50/- பற்று அட்டை (Debit card) /கடன் அட்டை (Credit card) / இணைய வழி வங்கிக் கணக்கு (Internet Banking) மற்றும் யுபிஐ (UPI) யை தேர்ந்தெடுத்து Google Pay/Paytm வாயிலாக செலுத்தலாம்.

மேலும் இணையதள வசதி உள்ள இடங்களிலிருந்தும் (பிரௌசிங் சென்டர்), அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள் பார்வையிட்டு இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி தரவரிசைப்பட்டியல் (Rank List) இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் குறுந்தகவல்களாக மட்டுமே அனுபப்பப்படும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் “மாதந்தோறும் உதவித் தொகை ரூ.500/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை, – காலணி – பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் ஆகியன வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *