எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில் செயல் இயக்குநர் ஆ. சங்கர் அவர்கள் வல்லநாடு ஆற்றுப் பாலம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் எம்பவர் இந்தியா அமைப்பு செயல் இயக்குநர் ஆ. சங்கர் அவர்கள் கூறியதாவது, “தூத்துக்குடி திருநெல்வேலி ரோட்டில் வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் அமைந்துள்ள புதிய பாலம் பலமுறை சேதமடைந்து குழி ஏற்பட்டு சரி செய்யப்பட்டது.
தற்பொழுது பாலத்தின் அடுத்த பகுதியில் மீண்டும் பழுதடைந்து சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதோடு இந்த பகுதி பல மாதங்களாக மூடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஒரு பாலத்தின் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள்; மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மேம்பாலப்பணி முழுமையாக முடிந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் வரை தூத்துக்குடி திருநெல்வேலி சாலையிலுள்ள சுங்கச் சாவடியில் சுங்க வரி வசூல் செய்வதை தடை செய்ய உத்திரவிடுமாறு வேண்டுகிறோம்.
மேலும் பல கோடி ரூபாய் செலவில் மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் அடிக்கடி பழுதடைவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அடிக்கடி பாலத்தின் இரு பகுதியும் பாதிக்கப்படுவது இந்த பாலம் சரியான முறையில் கட்டப்படாததே காரணம் என தெரிகிறது. ஆகவே இந்த பாலத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவழிக்கப்பட்டதா என்பதை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் மேலும் இந்த பாலத்தை பொறியியல் வல்லுநர்கள் உயர் மட்ட அரசு அதிகாரிகள் தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்கள் ஆகியோர்களைக் கொண்ட முத்தரப்பு குழுவை உடனடியாக அமைத்து ஆய்வு செய்து பாலத்தின் ஸ்திரத் தன்மை குறித்து அறிக்கை வெளியிடுமாறும் வேண்டுகிறோம்” என கூறியிருந்தார்.